- சராசரியாக நாள் ஒன்றுக்கு நம் மனதில் 60,000 எண்ணங்கள் கடந்து செல்கின்றன. முந்தைய நாளின் எண்ணங்கள் அதில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம். இந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வரப் பழகுங்கள். எல்லையில்லா எண்ணங்கள்தான் எதிர்காலத்துக்கான ஏணி. ஏக்கங்கள் எண்ணங்களாக மாறினால், ஏற்றம் நிச்சயம்!
- உங்கள் வாழ்க்கையின் தரம், நீங்கள் மற்றவர்களுடன் எவ்வாறு பேசிப் பழகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். மற்றவர்களுடன் என்பதைக் காட்டிலும் உங்களுடன் நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதும் முக்கியம். வானத்திலிருந்து எந்த தேவதையும் இறங்கி வந்து உங்களுக்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வாரி வழங்காது. உங்கள் முனைப்பே உங்களை முன்னேற்றும். இது இயற்கையின் விதி!
- முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள், முடிவுகளில் அல்ல! எந்த ஒரு காரியத்தையும் விரும்பியோ, மற்றவருக்கு உதவும் பொருட்டோ, நல்ல பயிற்சியாகவோ செய்து பழகுங்கள். அதனால் கிடைக்கும் பணம், புகழில் கவனத்தைச் சிதைக்காதீர்கள். அவை தன்னால் பின்தொடரும்!
- தினமும் சிரிக்கப் பழகுங்கள். நாலு வயதுக் குழந்தை தினமும் சராசரியாக 500 முறை சிரிக்கிறது. ஆனால், வளர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளத் துவங்கியவுடன் நாம் தினமும் 15 முறை சிரித்தாலே அதிகம். நம்பினால் நம்புங்கள், மனம்விட்டுச் சிரிப்பது ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு, உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது!
- சலனமற்று இருக்கப் பழகுங்கள். சராசரி மனிதன் ஒரு மாதத்தில் முப்பது நிமிடங்கள்கூட ஆழ்ந்த அமைதியில் கழிப்பதில்லை. ஒரு நாளில் பத்து நிமிடங்களாவது தனிமையின் அமைதியை, அதன் அதிர்வுகளை உணரப் பழகுங்கள். அது இதுவரை நீங்கள் உணர்ந்திராத உத்வேகத்தை அறியச் செய்யும்!
- உங்கள் லட்சியங்கள் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் மனதினுள் எழுந்தால், உடனடியாக பாஸிட்டிவ் எண்ணங்களால் உங்கள் சிந்தனைகளை ஆக்கிரமித்துக்கொள்ளுங்கள். அந்த எண்ணங்கள் கற்பனைகளின் உச்சமாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒருபோதும் நெகட்டிவ் சிந்தனைகளின் நிழல்கூட உங்களுக்குள் படியவிடாதீர்கள்!
- உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் நோகடிக்கவோ, காயப்படுத்தவோ முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் எந்த ஓர் அனுபவத்தையும் உங்களுக்குச் சாதகமாக எவ்வாறு மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது உங்கள் வெற்றிக்கான சூட்சுமம். கசப்பான அனுபவங்கள் என்று உலகத்தில் எதுவுமே கிடையாது. அனுபவங்கள் மட்டுமே உண்டு!
- தன்மை என்றால் மலரைப் போல் மிருதுவாகவும், தடாலடி என்றால் இடியைப் போல் அதிரடியாகவும் இருக்கப் பழகுங்கள். 'சரிதான்' என்று ஊர்ஜிதமானால் உங்கள் கொள்கைகளை நிறைவேற்றத் தயங்காதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கான மரியாதையை இழந்துவிடாதீர்கள்!
- மன அழுத்தமும் தேவைதான்! மன உளைச்சலுடன் ஒரு செயலைச் செய்து முடிக்கும்போது, அதற்கென நமது மனமும் உடலும் சில தகுதிகளை வளர்த்துக்கொள்கிறது. ஆனால், தொடர்ச்சியான மன அழுத்தமோ, உளைச்சலோ ஆரோக்கியமானதல்ல. கடுமையான மன அழுத்தத்தைத் தொடர்ந்து, சராசரி ஓய்வைவிட அதிக ஓய்வெடுக்க வேண்டும்!
- 'கோபப்படுவது எவருக்கும் எளிது. ஆனால், தகுந்த காரணத்துக்காக, சரியான சமயத்தில், சரியான அளவில், சரியான முறையில், சரியான நபரிடம் கோபப்படுவது அனைவருக்கும் சாத்தியமல்ல. அது ஒரு தனிக் கலை!' என்கிறார் அரிஸ்டாட்டில்.நீங்கள் அறிந்தவர்களிலேயே மிக மிக நேர்மையான நபர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்!
- மனதுக்கு அடிக்கடி சம்மர் வெகேஷன் கொடுங்கள். மிகுந்த அழுத்தத்தை உணர்ந்தால், உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை உலா வாருங்கள். அதிகாலையில் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக்கில் வாக்கிங், குளிப்பதற்கு குற்றாலம் அருவி, பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சில பல மதுரை மல்லிகைப் பூ இட்லிகள், உல்லாசமாக ஊட்டி ஏரியில் படகுச் சவாரி. பிசிபேளாபாத்தை ஒரு கை பார்த்துவிட்டு, மைசூர் அரண்மனையில் ஒரு ரவுண்டு, பனி போர்த்தும் மூணாறு மலை குளிருக்கு உதறியபடியே உறக்கம் என பர்ஸ் காலியாகமலேயே ஒரு ஜாலி ட்ரிப் அடியுங்கள். கம்ப்யூட்டரின் ரெஃப்ரெஷ் பட்டனாக, அந்தக் கற்பனை உங்களை உற்சாகப்படுத்தும்!
- சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருப்பவை எல்லாம் கடவுளின் வேதங்கள் அல்ல. அதில் உள்ளவற்றில் எவையெல்லாம் உங்களுக்குப் பொருந்தும் என்று நினைக்கிறீர்களோ, அவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி ரெடிமேட் கடையில் இருக்கும் சட்டைகளில் எல்லாமே உங்களுக்குப் பொருந்தாதோ, அதுபோலத்தான் சுய முன்னேற்றக் கருத்துக்களும். இதை உங்களுக்கு வேறு யாரும் சொல்ல மாட்டார்கள். அறிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ!
Friday, August 15, 2008
சிகரத்தைப் பிடிக்க சிரி!
'மெகாலிவிங்!' புத்தகத்திலிருந்து சில...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment